முன்னுரை :
உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் பிற உயிரினங்களை காட்டிலும் வித்தியாசமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றான். காரணம் அவன் இறைவனின் சிருஷ்டிப்பின் மகுடமாக படைக்கப்பட்டவன். ஆகவே அந்த இறைவனுடைய ஞானத்தின் சாயலானது மனிதனிடமும் காணப்படுகின்றது. அந்த ஆற்றலினால் மனிதன் தேவனோடும் சக மனிதரோடும் தொடர்புகொள்ள கூடியவனாக ஞானமுள்ளவனாக வாழக்கூடியவனாக இருக்கின்றான். அந்த பரத்திலிருந்து வருகின்ற ஞானத்தைக் குறித்தும், அதைப் பெற்றுக் கொள்ளுவது எப்படி என்பதைக் குறித்தும் இக்கட்டுரையில் நான் ஆராய்ந்துள்ளேன்.
ஞானிகளா? அஞ்ஞானிகளா?
பொதுவாக எமக்கு விஞ்ஞானிகளைப் பற்றித் தெரியும். ஆனால் யார் இந்த அஞ்ஞானிகள்? யார் இந்த ஞானிகள்? இதற்கான விளக்கத்தை யாக்கோபு புத்தகத்திலே காண்கின்றோம். ஞானத்தின் ஊற்றானவர் தேவன் என்பதை அறிந்த மக்களை ஞானிகள் என்று யாக்கோபு தனது புத்தகத்திலே அழைக்கின்றார். அப்படியாயின், இங்கே தேவனை அறியாத மக்கள்தான் அஞ்ஞானிகள் என்பது இலகுவாக புரிந்து விடுகின்றது.
இஸ்ரவேலர்கள் பொதுவாக ஞான பாரம்பரியங்களின் மேல் வாஞ்சையுள்ளவர் களாக இருப்பதை காண முடிகின்றது. ‘மக்கள் எவ்வாறு தங்களது வாழ்க்கையை அன்றாடம் சிறந்த முறையில் பராமரிப்பது, தேவனுடனான உறவில், தன்னுடனான உறவில், மற்றவர்களுக்கிடையேயான உறவில் ஏற்படும் விரிசல்களை எவ்வாறு தடுப்பது, போன்ற ஆவிக்குரியவைகளை பிரதிபரிக்கின்ற பாரம்பரியங்களை கொண்டிருந்தனர்’. இயேசுவும் இவ்வித போதனைகளையே போதித்திருக்கின்றார். அவற்றையே தெளிவாக யாக்கோபு தனது நிருபத்தில் எடுத்துரைக்கின்றார்.
உலக ஞானம் என்றால் என்ன?பொதுவாக, உலக ஞானத்தைக் குறித்து யாக்கோபு எழுதும்போது, ‘இந்த ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது’(யாக்.3:15) எனக் கூறுகின்றார். ஆகவே உலக ஞானம் என்றால் அது கல்வி, அனுபவம், பணம், படிப்பு போன்ற உலகத்திற்கு உரிய விடயங்களோடு சம்பந்தப்பட்ட ஜென்ம சுபாவத்திற்குரியதும், பேய்களிடமிருந்து வருகின்றதுமான விடயங்களாக இருக்கின்றன.
உலக ஞானத்தின் பிறப்பிடம்
இந்த உலக ஞானத்தின் பிறப்பிடம் உலகமாகும். இது லௌகீக சம்பந்தமானது. அதே சமயம் இது ஜென்ம சுபாவத்திற்குரியது. அதாவது ஆவிக்குரியதல்ல. இது பேய்களிடமிருந்து வருவது என யாக்கோபு கூறுகின்றார். “இது உலக தராதரத்தைக் கொண்டு மதிப்பிடுவதும், தேவனுடைய ஆவியைப் பெறாத ஞானமாகும். இத்தகைய ஞானத்தை உண்மையான ஞானம் எனக் கூறமுடியாது”
உலக ஞானத்தின் மேன்மை.
“இந்த உலக ஞானத்தின் மேன்மையானது அது மரபுவழி வருவதாகும். அது சரீரத்திற்கு விடுதலையைக் கொடுக்கிறதாக இருப்பதோடு அதன் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றுகின்றதாகவும் இருக்கின்றது. அது மனதிற்கும் விடுதலையைக் கொடுக்கின்றதாக இருக்கின்றது” இதிலே ஆவிக்குரிய மேன்மை இல்லை. மனித உணர்ச்சிகளும், சந்தர்ப்பங்களும் அதில் ஆளுகை செய்கின்றன. அநேக மக்கள் இந்த உலக ஞானத்தின் மேன்மையில் மயங்கியவர்களாக பரம்பரை பரம்பரையினராக இந்த மாயைக்குள் சிக்கியவர்களாக இதைப் பின்பற்றி வருகின்றார்கள்.
மெய் ஞானம் என்றால் என்ன?
மெய் ஞானமானது விசேஷித்தது. இது இவ்வுலகத்திற்குரியது அல்ல. இந்த ஞானமானது மெய்யான ஞானமாக பரத்திலிருந்து ஜோதிகளின் பிதாவினிடத்திலிருந்து வருகின்றதாக இருக்கின்றது. “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.” என யாக்கோபு 3:17 இல் எழுதுகின்றார்.
மெய் ஞானத்தின் பிறப்பிடம்.
“மெய் ஞானமானது தேவனோடுள்ள ஒருவரின் உறவு சம்பந்தமானது. இந்த ஞானம் நம்மைப் படைத்தவரிடமிருந்து வருவதால் நமக்கு உரிமை கொண்டாடவும் கூடியதாயிருக்கின்றது. இந்த ஞானமானது தேவனே ஜீவனுக்கு ஊற்று என்பதை நிரூபிக்கின்றது.” உன்னதத்திலிருந்து வருகின்ற இந்த ஞானமானது நம்முடைய குணாதிசயத்திலே காணக்கூடியதாக இருக்கும்.
மெய் ஞானத்தின் மேன்மை.
பரத்திலிருந்து வருகின்ற ஞானமோ நல்லொழுக்கமுள்ளதும் நற்குணத்திற்கு நம்மை வழிநடத்திச் செல்கின்றதுமாக இருக்கின்றது. இது தேவனுடனான உறவினை முக்கியப்படுத்துகின்றது. வாழ்க்கையில் உண்மை பேசுதல், உத்தமனாய் நடத்தல், அறநெறியுடன் வாழுதல், ஒழுக்கமாக வாழ்தல், நம்பத்தகுந்தவராக இருத்தல், நீதிமானாக இருத்தல் போன்றவை இதிலே காணப்படும் சிறப்பம்சமாகும். இதிலே ஆவிக்குரிய மேன்மை காணப்படுகின்றது.
ஞானத்தின் அவசியம் என்ன?
இன்று உலக மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கு உரிய ஞானம் அவசியமாக இருக்கின்றது. எனினும் அநேக மக்கள் ஞானவான்கள் அல்ல. அவர்களிடம் அறிவும் தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன. எனினும் இந்த அறிவும் தகவல்களும் அவர்களின் வாழ்க்கைக்கு நன்மையை பெற்றுத்தர போதுமானதல்ல. நாம் பெற்றுக்கொண்ட அறிவை, தகவல்களை நாம் சிறப்பாக பிரயோகிக்கும்போது அது ஞானமாக இருக்கின்றது. இந்த ஞானமானது தேவனுக்குப் பயப்படுவதினால் பெறுமதியுள்ளதாக மாறுகின்றது. எம்முடைய அன்றாட பிரச்சனைகளை, நம்மிலும், சமுதாயத்திலும், தேசத்திலும் காணப்படும் சீர்கேடுகளை மாற்றியமைக்கும் ஞானத்தையே நாம் பெற்றுக்கொள்ள முற்பட வேண்டும். இதற்கு தெய்வ பயம் இன்றியமையாதது.
யார் ஞானத்தைப் பெறுகின்றார்கள்?
உண்மையில், தெய்வீக ஞானத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் அதை தேவனிடத்தில் கேட்பார்கள் (யாக்.1:5). அவர்கள் தேவனிடத்தில் கேட்பதினால் அந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்வார்கள். மனித வாழ்க்கைக்குரிய பிரச்சனைக்குரிய தீர்வை பெற்றுக்கொள்பவனே ஞானமுள்ளவன். “தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை.” (ஆதி.41:39) என்று யோசேப்பைப் பார்த்து பார்வோன் கூறக் காரணம் என்ன? அவனிடத்தில் தெய்வ பயம் இருந்தது. ஆகவே ஞானத்தை தேவன் அவனுக்கு வெளிப்படுத்தினார். இன்றும் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பமாக இருக்கின்றது. மேலும் விநோதமான வேலைகளை யோசித்து செய்வதற்கு, “சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்.” (யாத்.31:5) இல் தேவன் மோசேக்கு கூறுவதையும் காண்கிறோம். ஆகவே தேவனே மனிதரை ஞானமுள்ளவர்களாக மாற்றுகின்றார் என்பது உறுதியாகின்றது. ஆகவே தேவனுக்குப் பயப்படுகின்ற அவரிடத்திலிருந்து இரக்கத்தைப் பெறுபவன் எவனோ, அவன் தேவனிடத்திலிருந்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுவான்.
ஞானத்தின் விளைவுகள் என்ன?“ஞானத்தின் பெறுமதியானது ஒருவர் என்ன அறிந்திருக்கின்றார் என்பதில் அல்ல. அவர் எவ்வாறு வாழ்கிறார் என்பதிலே தங்கியுள்ளது” எனவே ஞானத்தின் விளைவானது சிக்கல்களைத் தீர்ப்பதும், பாடுகளை கஷ்டங்களை சாதகமாக மாற்றிக் கொள்வதும், வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு மடத்தனமாக முகங்கொடுக்காமல் இலகுவாக அவற்றிற்கு பதிலளிப்பதுமாக இருக்கின்றது. ஆகவே ஞானமானது ஒருவனுக்கு எல்லாச் சூழ்நிலையிலும் திருப்பதியுடனும், ஒழுக்கமுள்ள வாழ்க்கையை தேவ பயத்துடன் வாழவும், போதுமென்ற மனதுடன் பரிப+ரணத்தை அனுபவிக்கவும் உதவி செய்கின்றது.
ஞானத்தைப் பெறாதவர்களின் நிலைமை என்ன?உண்மையில் ஞானத்தை பெறாதவர்களின் நிலைமை எப்போதும் பரிதாபமே. அவர்களின் இருதயத்திலே கசப்பான வைராக்கியமும் விரோதமும் காணப்படும். மற்றவர்கள் மீது சார்ந்திருப்பதை கேவலமானதாக எண்ணுவார்கள். அதைவிட வீண் பெருமை பாராட்டுவார்கள். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்வார்கள். இப்படிப்பட்டவர்கள் லௌகிக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்துக்குரியதும், பேய்த் தனத்துக்கடுத்தவர்களுமாக இருப்பார்கள். யாக்கோபு இவர்களின் நிலையைக் குறித்து “வைராக்கியம் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச் செய்கைகளு முண்டு.” எனவும் “இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான்.” எனவும் கூறுகின்றார். ஆகவே ஞானத்தைப் பெறாதவர்கள் துர்ச்செய்கையும் கலகத்தையும் நடப்பிக்கின்றார்கள். அதனால் வைராக்கியமும் யுத்தமும் ஆரம்பிக்கின்றது. அது தன்னையும் தனது குடும்பத்தையும் அழிக்கின்றது. ஞானத்தைப் பெறாதவர்கள் நாட்டை ஆட்சிசெய்தால் அது அவர்களின் தேசத்தையும் அழிவுக்கு நேராகவே வழி நடத்திச் செல்லும். இதற்கு எமது நாட்டின் அரசியல் வரலாற்றை உதாரணமாக கூறலாம். ஞானமற்ற தன்மையானது சமுதாயத்தையும் குடும்பத்தையும் அழிவுக்குள்ளாக்குகின்றது.
ஞானம் எங்கிருந்து வருகின்றது?
மெய் ஞானத்தின் பிறப்பிடமானது தேவனே. அவரே ஞானத்தைக் கொடுக்கின்றவர். தேவனே ஜீவனுக்கு ஊற்று. ஆகவே உன்னதத்திலிருந்து ஞானம் வருகின்றது. “முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞான திஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்@ இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான்”(1சாமு.9:9) “நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளிய ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்” (1இரா.3:28). “சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.” (1இரா.10:24) “நீதிமான்களும் ஞானிகளும், தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாக இருக்கிறார்கள்.” (பிர.9:1) ஆகிய வேத வசனங்களின் ஊடாக ஞானம் தேவனிடத்தில் இருந்தே வருகின்றது என்பது நிரூபணமாகின்றது.
ஞானத்தைக் கொடுப்பவர் யார்?
“கர்த்தர் மகா ஞானமுள்ள தேவன்” (1சாமு.2:3) “கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, (1நாளா.22:12). ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா? (1கொரி.1:20). ஆகவே இவ்வுலகத்தின் சகல ஞானத்தையும் பைத்தியமாக்குபவரும், இவ்வுலகத்தில் தமக்குப் பயந்தவர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பவரும் கர்த்தரே.
ஞானத்தைக் குறித்த புதிய ஏற்பாடு தருகின்ற சில வேத வசனங்கள் :
1கொரி.1:25 : “இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது”
1கொரி-1:31 : “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.”
ரோம-11:33 : “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!”
1தீமோ-1:17 : “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக.”
லூக்.2:52 : “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.”
ஞானத்தைப் பெறும் வழிமுறைகள்
தேவனிடத்திலிருந்து வருகின்ற ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நாம் தேவனிடத்தில் முதலாவது ஜெபிக்க வேண்டும். இரண்டாவதாக ஞானத்தை தேட வேண்டும். இவைகளைக் குறித்து இனி கவனிப்போம்.
அ. ஞானத்தைப் பெற ஜெபித்தல்.
“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5)
நாம் ஜெபிக்கும்போது மாயக்காரரைப்போல தவறான உள்ளத்தோடும், தவறான நோக்கத்தோடு ஜெபிக்கக்கூடாது என்று கற்றுத்தந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, நாம் எப்படி ஜெபிக்கக்கூடாது என்பதைக்குறித்து கூறும்போது, 'அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள். அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்" (மத்தேயு 6:7) என்றார். இங்கே தேவனை அறியாத மக்கள்தான் அஞ்ஞானிகள். அதனால்தான் கடவுளை அறியாதவர்கள் போல ஜெபிக்கவேண்டாம் என ஆண்டவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இவ்வசனத்தில் ஜெபத்தில் அவர்களைப்போல வீண்வார்த்தைகளை (பொய்) அலப்பாதேயுங்கள் என்றும் கூறுகின்றார். வீண் வார்த்தைகள் என்றால் என்ன? இதை அர்த்தமில்லாத வார்த்தைகள் என்றும் கூறலாம். இந்த உலகத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகள் என்று ஏதாவது உண்டா? இல்லை வார்த்தை என்று சொன்னாலே அதற்கு ஏதோ ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யும். அர்த்தமில்லாதவை வார்த்தை என்ற அழைக்கமுடியாது. அப்படியானால் இங்கே அர்த்தமில்லாத வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என ஆண்டவர் எதனைக் குறிப்பிடுகிறார்? அர்த்தமுள்ள வார்த்தையை ஒருவர் அர்த்தமில்லாமல் உச்சரிப்பதுதான் அர்த்தமில்லாத ஜெபமாகும். இதுவும் ஞானமற்ற தன்மைக்கு ஒரு சிறந்த சான்றாகும். நாமோ ஞானத்தைத் தருகின்ற தேவனிடத்தில் தைரியத்தோடு அர்த்தத்தோடு ஜெபித்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நாம் அஞ்ஞானிகளாக திகழமாட்டோம்.
ஆ. ஞானத்தைத் தேடுங்கள்.
“ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?” என யோபு 28:12 இல் கேட்கின்றார். “பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்@ புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்." (நீதி.14:6). “சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்." (பிர-9:13) போன்ற வசனங்களிலிருந்து நாமும் ஞானத்தை தேடி கண்டுபிடிக்க முடியும் என்பதைக் காண்கின்றோம்.
'தேவன் தருகின்ற ஞானமுள்ள வழிநடத்துதலைப் பெறவேண்டுமானால், அவர் ஏற்கனவே தந்துள்ள வழிநடத்துதல்களைக் கண்டுபிடிக்கவேண்டும்." நான் ஒருசில காரியங்களுக்காக அவரிடமிருந்து வழிநடத்துதல்களைப் பெறவேண்டுமென அவரிடம் ஜெபிக்கும்போது, 'நான் கடைசியாக கொடுத்த வழிநடத்துதலை வைத்துக்கொண்டு நீ என்ன செய்தாய்?" என்று அவர் கேட்பதை நான் அடிக்கடி உணர்ந்திருக்கின்றேன். என கூறுகிறார் ஒரு தேவ மனிதர். ஆம், தேவ ஞானமானது அவருடைய வழிநடத்துதலைப் பெறுவதாகும். எனவே நாம் எப்போதும் ஞானத்திற்காக தேவனைச் சார்ந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.
இ. ஞானத்தை இழந்துவிடாதிருங்கள்.
“ய+தர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.” என பவுல் 1கொரி-1:22 இல் கூறுவதையும் நாம் மறந்துவிடலாகாது. அடையாளம் மட்டும் போதாது. ஞானத்தை நாம் தேடி பெற்றுக்கொள்ள வேண்டும். அதை இழந்துபோவதை தேவன் விரும்பவில்லை. “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்.” என யாக்கோபு நமக்கு உற்சாகம் தருகின்றார். (யாக்கோபு 1:7-8).
ஈ. ஞானத்தை நடப்பியுங்கள்.
“உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.” என யாக்கோபு 3:13,18 ம் வசனங்களிலே கூறுகின்றார். நாம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டால் மாத்திரம் போதாது. தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட ஞானத்தை நாம் கிரியையில் காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
உ. ஞானத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்.
நாம் ஞானமுள்ளவர்களாகி விட்டோம் என்று எண்ணும் நிலை வந்தவுடன், நாம் ஞானமுள்ளவர்கள் என்பதால் கற்றுக்கொள்பவன் என்ற நிலைக்கு அப்பால் போகக்கூடாது. அதாவது ஞானமாய் வாழ்வதென்பது ஒவ்வொரு நாளும் சுயம் சிலுவையில் அறையப்பட்ட வாழ்வாகும். ஒவ்வொரு நாளும் நமது தேவைகளைவிட பிறரது விருப்பங்களுக்கு முதலிடம் கொடுப்பதாகும். ஒவ்வொரு நாளும் தேவனுடன் நடப்பதாகும்”. ஆகவே நாம் ஞானத்தை பின்பற்ற தேவன் நமக்கு தந்துள்ள மாதிரியை பின்பற்ற அழைக்கப்பட்டவர்களாக இருக்கின்றோம். “தேவனே எம்மை ஞானமுள்ளவர்களாக்கும்” என்று கேட்பதோடு அவர் தருகின்ற மனத்தாழ்மையை அணிந்து கற்றுக் கொள்பவர்களாக இருக்கவேண்டும். “நாம் உண்மையாகவே இதற்கு பசி தாகமுள்ளவர்களாக இருக்காவிட்டால் நாம் திருப்தியற்றவர்களாகி விடுவோம்”.
ஞானத்தைப் பெற நமது பங்கு :
உண்மையில், “நாம் ஞானமுள்வர்களாக வேண்டுமாயின் முதலாவதாக ஞானம் தேவை என்பதை நாம் உணரவேண்டும். நாம் தாழ்மையுடன் தேவனிடத்தில் வருவோமாயின் அவர் நமது குறைகளை நிறைவாக்குவார்”. மேலும், மற்றவர்கள் மீது சார்ந்திருப்பதை மிகவும் கேவலமான பெலவீனமாக உலக ஞானம் கூறும். ஆனால் தேவனுடைய ஞானமோ தனது சுதந்திரத்தை இழப்பது ஆவிக்குரிய அழிவை கொண்டு வரும் என நம்மை எச்சரிக்கின்றது.
முதலில் ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நாம், ஞானமென பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களை விட்டு விலகி இருக்கவேண்டும். இதனைத் தான் பவுல் தீமோத்தேயுவுக்கு கூறுகின்றார். “ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.” (1தீமோ-6:20). என எச்சரிக்கின்றார். நாமும் தீய கொள்கைகளுக்கும் விபரீதமான தர்க்கங்களுக்கும் வீண் பேச்சுக்கும் விலகி இருக்க வேண்டியது அவசியமாகும்.
அதேவிதமாக, “மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே@ அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான்.” (நீதி-23:9) எனவும், “உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை.” (நீதி-22:17) எனவும் சாலொமோன் ஞானியும் எச்சரிக்கின்றார். ஞானத்தை நாம் விருப்பமாக பெற்றுக்கொள்ள தேவனுடைய சத்தத்தை கேட்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். “கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்.” (நீதி-22:12) என நீதிமொழி கூறுகின்றது. முத்துக்களை தேவன் ஒருபோதும் பன்றிகளுக்குக் கொடுக்கமாட்டார். நாம் தேவனுடைய ஞானத்தைப் பெற்றுக்கொள்ள உண்மையாகவே வாஞ்சித்து, அவருடைய கட்டளைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் நடக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். தேவனுடைய இரட்சிப்பானது இலவசமானது. அவ்வாறே அவர் தருகின்ற ஞானமும் இலவசமானது. இதனை ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பெற முற்படவேண்டும்.
ஆகவே தேவன் தருகின்ற ஞானத்தை நாம் கரிசனையோடு பயன்படுத்துவோம். நமது வாழ்வை தேவனுக்கு மகிமை தருகின்ற வாழ்வாக மாற்றியமைப்போமாக.
முடிவுரை
ஒரு மனிதன் நியாயப்பிரமாணத்தின்படியாகவோ அல்லது லௌகீக ஞானத்தின் படியாகவோ எப்போதும் தான் ஞானமுள்ளவனாக வாழ முடியும் எனத் தீர்மானிப்பானாகில் அது ஒருபோதும் முடியாத ஒன்றாகவே இருக்கும். அவ்வாறே ஞான ஊற்றாகிய தேவனை அறியாத நிலையிலேயே இன்று மனிதர்களில் பலர் காணப்படுகின்றனர். ஆனால் கிருபையினாலே தேவனுடைய ஆளுகைக்குள் நம்மை அர்ப்பணித்து வாழும்போது சத்திய பரராயிருக்கும் இயேசுகிறிஸ்து நமக்குள் வாசம் செய்கின்றபடியினால், அவர் நமக்கு பரம ஞானத்தைக் கொடுத்து உதவி செய்ய வல்லவராக இருக்கின்றார்.
இந்த பாவமான உலகத்திலே கிறிஸ்தவர்களாகிய நாம் ஞானமுள்ளவர்களாக திகழவேண்டும் என்பது நம்முடைய பரம தகப்பனுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இ.இ.வஷ்னீ ஏனர்ஸ்ட்