பிறருக்காக வாழ்!

''நீ!!! யாருக்காக வாழ்கிறாயோ'' அவர்களுக்காக உன்னை விட்டுக்கொடு.
''உனக்காக யார் வாழ்கிறார்களோ'' அவர்களை எதற்காகவும் விட்டுகொடுத்துவிடாதே!!!

தெரிவற்ற வருங்காலம்.

வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் காணப்படும் தெரிவற்ற வருங்காலம்.இந்தத் தலைப்பிலே, நான் எனது வாழ்க்கையில் சந்திக்கக் காத்திருக்கும் எதிர்காலத்தைக் குறித்தும் அது தொடர்பான தேவனுடைய வழிநடத்தல் என்னவாக இருக்கும் என்பதைக் குறித்தும் ஆராய முற்பட்டுள்ளேன்.

தேவனுடைய மகா பெரிதான ஊழியத்திலே, நானும் ஏதோவொரு விதத்தில் ஒரு அங்கமாகஇருக்கும்படியாக தேவன் என்னைத் தெரிந்தெடுத்துவிட்டார். இது நான் எதிர்பாராமல் எனக்கு நேரிட்ட ஒன்று. நான் ஒருபோதும் ஊழியம் செய்யப் போவதில்லை என்ற நிச்சயமுடன் சிறு வயதிலிருந்தே உறுதியாக இருந்தேன். காரணம் என்னுடைய பெற்றோரும் ஊழியம் செய்பவர்கள் தான். அவர்கள் நாளாந்தம் சந்திக்கின்ற ஊழியத்தின் பிரச்சனைகளைக் குறித்து நானும் கேள்விப்பட்டு வந்தமையினால் அந்தத் தவறை நான் செய்யக்கூடாது என என்னுடைய 23ம் வயதுவரை எண்ணி வாழ்ந்து வந்தேன். எனினும் இனி என்ன நடைபெறும் என்பதைக் குறித்த எவ்வித தெளிவும் நிச்சயமும் இல்லாமையினால் தேவனுடைய கரத்திலேயே தங்கியிருக்க வேண்டியதாக இருந்தது. எனினும் தேவன் என்னை தேவ ஊழியப் பணியிலே ஈடுபடும்படியான இருதயத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல், நான் விரும்பியபடியான பணியாக இருந்தமையினால் அதனை நான் பெரும் சேவையாக கருதி ஏற்றுக்கொண்டேன். அது ஒரு சபையாக இருந்திருந்தால் என்னுடைய முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும். இந்த நல்ல தெரிவை செய்வதற்கு என்னுடைய பெற்றோரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். தற்போது அந்தப் பணியினை முன்னெடுத்து வருகின்ற நான், தொடர்ந்தும் அந்தப் பணியிலே மனரம்மியமாக இருக்க முடியுமோ என அஞ்சுகின்றேன். அதன் காரணமாக என்னுடைய தெரிவு வருங்காலத்தைக் குறித்து எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கின்றது.
நான் எவ்வளவு நாள் வாழுவேன் என்று நான் அறியேன். அதைப் போலவே நான் எவ்வளவு நாள் இலக்கிய ஊழியத்தில் ஈடுபடுவேன் என்பதும் எனக்குத் தெரியாது. நான் எவ்வளவோ பிரயாசப்பட்டு சிறப்புடன் இந்த பணியினை முன்னெடுத்தாலும் என்னுடைய முடிவு எதுவாக இருக்குமோ என நான் அஞ்சுபவனாகவே இருக்கின்றேன். எனது எதிர்காலத்தைக் குறித்த அறிவு எனக்கு உண்மையில் இல்லை. எனினும் தற்போது நான் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை மாத்திரம் செய்து வருகின்றேன்.

தற்போது என்னுடைய குடும்பத்தில் நான் ஒரு பாரமாக இராதபடி தேவன் உதவிசெய்கின்றார். எனினும் எனக்கென ஒரு குடும்பம் வந்தால், திருமணம் ஆனால்..., போன்ற கேள்விகள் வரும்போது என்னுடைய பொருளாதார நிலை எப்படியிருக்கும் என எனக்கு கூறத் தெரியாது. அவ்வாறே இவற்றையெல்லாம் அனுசரித்துப் போகக்கூடிய ஒரு வாழ்க்கைத் துணை எனக்கு எப்படி? யார்? எங்கே? சந்திப்பேன் போன்ற கேள்விகளுக்கும் தற்போது பதில் இல்லை. எனினும் ஒன்று நிச்சயம். தேவன் ஈசாக்குக்கு ரெபேக்காளைக் கொடுத்ததுபோல, ஆதாமுக்கு ஏவாளைக் கொடுத்ததுபோல எனக்கும் உதவி செய்வார் என நம்புகின்றேன். ஆகமொத்தத்தில் என்னுடைய எதிர்காலம் நிச்சயமற்றது. அது தேவனுடைய கரத்திலேயே இருக்கின்றது.

என்னுடைய பெலத்தினால் எதையும் செய்யவோ வாழவோ என்னாற்கூடாது என்பதை மாத்திரம் “பிரசங்கி” பாடத்தைக் கற்றுக்கொண்டதின் விளைவாக உணர்ந்துகொண்டேன். “ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார் என்று அறி.” (பிரசங்கி 12:14)
. அனைத்தும் மாயை என்று கூற முடியாது. காரணம் தேவன் என்னைத் தாங்குகின்றார். அவர் என்னை வழிநடத்துகின்றார் என்பதை மாத்தரம் என்னால் உணரக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கு நன்றியைச் செலுத்துகின்றேன். தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள். எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. என்பதை நான் உண்மையென உணருகின்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.